Thursday 21 February 2013

மழையோடு ஓர் நேர்முகம்

எப்போதாவது மண்ணைத் தொடும் மழையோடு ஒரு நேர்முகம்: -
தாங்கள் எப்போதாவதுதான் மண்ணைத் தொடுகிறீர்கள், உண்மைதானே?
ஆம்! எனை வரவேற்க மரங்களில்லை என்ற கோபம்தான்!
உங்கள் பொழுதுபோக்கு?
சுகமாய் மேகக் கூட்டங்களோடு சுற்றித் திரிவது!
உங்களுக்குப் பிடித்த விளையாட்டு?
மாடிவீடோ குடிசைவீடோ பல்லாங்குழிதான் எனக்குப் பிடித்த விளையாட்டு!
உங்கள் சந்தோஷம் எப்பொழுது?
புதிதாய் மலர்ந்த மலரினைத் தழுவும்போது!
உங்கள் துக்கம்?
கூரை கலைந்த குடிசைக்குள் நுழையும் போது.
எப்போதும் வேலையோ?
இல்லை! இடையிடையே
இலைகளில் இளைப்பாறிவிட்டுத்தான்
பூமியையே தொடுகிறேன்!
சரி! மண்வாசம் பற்றி ஏதேனும் கூறுங்கள்!
அது மழைக்கான வரவேற்பு!
மணமகளாய் மண்ணைத் தொடும் மழைக்கு சிற்சில "பாக்டீரியாக்கள்" தெளிக்கும் பன்னீர்!
வானவில்?
அவன்
என்னைக்
காதலிப்பவன்!
அப்படியானால் பூமி?
எனக்கும் பூமிக்குமான
நிச்சயதார்த்தம் அவனுக்குத் தெரியாது.
பிறகு / வானவில்?
எனைக் கவரவே
வர்ணம் உடுத்துகிறான்
கரைத்துப் பார்க்கிறேன் முடியவில்லை.
அப்படியா?
ஆம்! நீங்கள் கவிதையில் மட்டுமே வானை வளைப்பீர்கள்!
அவன் எனக்காக தன்னையே வளைத்து நிற்கிறான்!
இடியைப் பற்றி?
அது மேகங்களுக்கிடையிலான பஞ்சாயத்து! / யார் முதலில்
துளியாய் மாறுவதென
மேகங்களுக்குள்ளான பஞ்சாயத்து!
மின்னல்?
பஞ்சாயத்திற்கான வான வேடிக்கை!
மொத்தத்தில் பூமி!
என் காதலன்
எனையூற்றிக் கொண்டு கவியெழுதும் கவிஞன்!
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை - எனில் யார் யார் அந்த நல்லார்?
இரவல் முகந்தொலைத்தவன்
சுயநலம் விற்றவன்
மனிதத்தை நேசிப்பவன்
இவர்களைக் கழித்தால்
இரு வகையுண்டு.
ஒருவகை குழந்தைகள்; மற்றொன்று மனவளர்ச்சியில்லாதவர்கள்!
ஏன் இவர்கள் மட்டும், நாங்கள்?
இவர்களில் இரவல் முகமில்லை!
உங்களில்?
இவர்களில் சுயநலத்தின் சாயலில்லை!
உங்களில்?
சரி! இறுதியாய் மனிதர்களான எங்களைப் பற்றி ஏதேனும் கூறுங்கள்?
மன்னிக்கவும்! கருத்துகூற விரும்பவில்லை. by Ruthratcham call 9003452209

No comments:

Post a Comment